நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 ஜூலை, 2020

இங்கிலாந்து விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் முழுவதிலும் தினமும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், பாதிப்பு 
எண்ணிக்கையும் அனைவரையும் கவலை கொள்ள செய்து இருக்கின்றன.எனவே எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவது என்ற வைராக்கியத்தில் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன. 
உலக நாடுகளின் மருந்து ஆய்வு நிறுவனங்களின் பரிசோதனைக்கூடங்கள் அனைத்தும் கொரோனா என்ற ஒற்றை அரக்கனை ஒழிப்பதற்கான தடுப்பூசி எனும் ஆயுதத்தை உருவாக்குவதில் இரவு-
பகலாக உழைத்து வருகின்றன.இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி 
முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? 
என்பதும் ஆராயப்பட்டது.இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை
 மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறியிருப்பதாவது:
இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலும் 
அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டுள்ளோம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் இரட்டை கரங்களையும் இந்த
 தடுப்பூசி உருவாக்கி இருக்கிறது.அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது. இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம்.மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.இவ்வாறு அட்ரியன் ஹில் தெரிவித்தார்.
இதைப்போல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவின் கோவேக்சின்:இதற்கிடையே இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடிலா ஆகிய 2 நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து உள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியை சோதிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவ நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்திருந்தது.அதன்படி தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரும் ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கான முன்பதிவை நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது. முதற்கட்ட பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படும் 375 பேரில் சுமார் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இந்த முன்பதிவை முடித்து வருகிற 23- ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட பரிசோதனை
 தொடங்க வாய்ப்பு இருப்பதாக பரிசோதனைக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்தார்.இந்த முதற்கட்ட பரிசோதனை நல்ல விளைவை அளித்தால், அடுத்ததாக 2-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் தடுப்பூசியின் தரம் உறுதி செய்யப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்கிலாந்தில் மேலும் 3 தடுப்பூசிகள்:ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை தவிர இங்கிலாந்தை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் மேலும் 3 வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இந்த மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதிப்பதற்காக 
தன்னார்வலர் களை அரசு நாடியுள்ளது.இதற்காக ஆன்லைன் பதிவகம் ஒன்றை திறந்துள்ள அரசு, அதில் தடுப்பூசி பரிசோதனைக்கு விரும்பும் இங்கிலாந்து குடிமகன்கள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் வரை இதில் பதிவு செய்வார்கள் என அரசு நம்பிக்கை
 தெரிவித்து உள்ளது.
ரஷியாவின் நிலை:இந்த நிலையில், ரஷியாவை சேர்ந்த கமாலெயா ஆய்வு நிறுவனம் 2 தடுப்பூசிகளை தயாரித்து உள்ளது. இதுவும் மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த பரிசோதனை 
தடுப்பூசி ரஷியாவின் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போடப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன. 
இதை சுகாதார அமைச்சகம் மறுத்து 
உள்ளது.இது குறித்து சுகாதார அமைச்சரின் உதவியாளரான குஸ்னட்சோவ் கூறுகையில், ‘கமாலெயா நிறுவனம் தயாரித்த 2 தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் தொடர்கின்றன. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த 
பரிசோதனை முடிந்தபிறகே தடுப்பூசி பதிவு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இந்த தடுப்பூசி 
இதுவரை வர்த்தக நோக்கில் வெளியிடப்படவில்லை. மருத்துவ சோதனைகளின் கட்டமைப்புகளுக்கு வெளியே அதன் பயன்பாடு சாத்தியமற்றது’ 
என்று தெரிவித்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக