ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள இயக்குநர் பேட்டி
ஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிஎஸ் எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட் டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ரூ.13 ஆயிரம் கோடியில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது டிசம்பரில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஏவுதள இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:
3-ம் தலைமுறை ராக்கெட்
விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதனை அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை நம்நாட்டி லேயே உருவாக்கும் விதமாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற 3-ம் தலைமுறை ராக்கெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டை தயாரித்து வருகிறோம். இந்த பரிசோதனை திட்டத்துக்கு ரூ.140 கோடி செலவிடப்பட்டுள்ளது. 600 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட் கருவிகளுக்கான செலவு மட்டும் ரூ.15 கோடி. இதை டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளோம்.
630 டன் ராட்சத ராக்கெட்
ராக்கெட் 630 டன் எடை கொண்டது. இஸ்ரோ வரலாற்றி லேயே அதிக எடையில் ஏவப்படும் ராக்கெட் இது. வீரர்கள் பயணிப்பதற்கான பரிசோதனை நிலையிலான கலம் (க்ரூ), தனது முழு இலக்கு வரை செல்லாது. புறப்பட்ட 11.40 நிமிடத்தில் அந்தமான் அருகில் விழும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் முழு வெற்றி கிடைக்காவிட்டாலும், இலக்கை நோக்கி பயணிப்பது, கீழே விழும் கலத்தை பத்திரமாக மீட்பது ஆகியவற்றில் நமது தொழில்நுட்பத்தின் வலு தெரியவரும்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை அனுப்ப மத்திய அரசு தற்போதுவரை அனுமதி அளிக்கவில்லை. மனிதனை அனுப்ப எங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்ட பிறகு, அனுமதிக்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு இயக்குநர் பிரசாத் கூறினார்.
கடலில் விழுகிறது கலம்
ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டில் 3 அடுக்குகளில் எரிபொருள் நிரப்பப் படும். முதல் நிலையில் எஸ்.200 என்ற இரு உருளைகளில் திட எரிபொருள் நிரப்பப்படும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் 130 விநாடி வரை எரிந்து, ராக்கெட்டில் இருந்து கழன்று கடலில் விழுந்துவிடும். அதற்குள் ராக்கெட் 70 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கும்.
113-வது நொடியிலேயே 2-வது அடுக்கில் உள்ள திரவ எரிபொருள் நிரப்பப்பட்ட எல்-110 என்ற உருளை எரியத் தொடங்கும். இது 200-வது விநாடி வரை எரியும். அப்போது ராக்கெட் 126 கி.மீ. சென்றிருக்கும். 3-வது அடுக்கில் நீர்ம நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது எரியாமல் 126-வது கி.மீ. தொலைவில் ராக்கெட்டில் இருந்து கழன்றுவிடும். அதன் பின்னர் ராக்கெட்டில் உள்ள க்ரூ கலம் கீழே விழும். அது 1600 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையை அடையக்கூடும். இதை தடுக்க அலுமினிய பூச்சு கொண்ட சிலிகான் தகடால் மூடியிருக்கிறோம்.
புவி ஈர்ப்பு விசையால் க்ரூ கலம் வேகமாக கீழே விழுவதை தடுக்க 3 அடுக்கில் பாராசூட் பொருத்தப்பட்டிருக்கும். பாராசூட் ஒன்றன் பின் ஒன்றாக விரிந்து, கலம் மெதுவாக அந்தமான் அருகே 160 கி.மீ. தூரத்தில் கடலில் விழும். கடலோர காவல் படை, விமானப் படை உதவியுடன் அது மீட்கப்படும் என்று ராக்கெட் ஏவுதளத்தின் தொழில்நுட்ப அலு வலர்ர்கள் கூறின.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக