அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் தான் வாங்கிய ஆடையில் மடித்து தைத்த பகுதிக்குள் இறந்த எலியொன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துடன், வழக்கும் தொடுத்துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கெய்லி பிசெல் எனும் 24 வயதான இந்த யுவதி, “ஸாரா” எனும் ஸ்பானிய ஆடை விற்பனை நிறுவனமொன்றிடமிருந்து மேற்படி புதிய ஆடையை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
40 அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 6000 ரூபா) வாங்கப்பட்ட இந்த ஆடையை சில வாரங்களின் பின்னர் தனது வேலைத்தளத்துக்கு அணிந்து சென்றபோது அதிக துர்நாற்றம் ஏற்பட்டதாம்.
தனது காலில் ஏதோ உராய்வதை உணர்ந்த கெய்லி பிசெல், மேற்படி ஆடையை ஆராய்ந்தபோது, ஆடையில் மடித்து தைத்த பகுதிக்கு வெளியே எலியொன்றின் கால் நீட்டிக்கொண்டிருப்பதை அவதானித்தாராம்.
“தையலிடப்பட்ட பகுதியை தொட்டபோது, எலியொன்றின் கால் தென்பட்டது. அப்போது அதிர்ச்சியினால் நான் உறைந்து போய்விட்டேன்” என கெய்லி பிசெல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மேற்படி நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரி கெய்லி பிசெல் வழக்குத் தொடுத்துள்ளார். இது தொடர்பாக ஸாரா யூ.எஸ்.ஏ. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து நிறுவனம் அறிந்திருக்கிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. ஸாரா யூ.எஸ்.ஏ. நிறுவனமானது இறுக்கமான சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நியமங்களை பேணுவதற்கு உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக