செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக 1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை
பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான் விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.
இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர்
உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக