நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாலம் இடிந்து இத்தாலியில் பலர் உயிரிழப்பு

இத்தாலியின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்த விபத்தில் இதுவரை 26 பேர் பலியானதாகவும், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பல எண்ணிக்கையிலான வாகனங்கள் 45 மீட்டர் உயரத்தில்
 இருந்து கீழே வீழ்ந்துள்ளன
இதுவரை 12 பேரை காணவில்லை என்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அபயக் குரல்கள் தொடர்ந்து கேட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலி முழுவதிலும் இருந்து வந்த 300 தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்களை கொண்டும், மலையேறும் கருவிகளை கொண்டும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
பாலத்தின் பிற பகுதியும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் நூற்றுகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிக மழைபெய்து கொண்டிருந்த சமயத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும்
 எழுந்துள்ளன.
இந்த பாலம் இடிந்து வீழ்வதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான மொரண்டி பாலம் 1960 ஆம் ஆண்டில் 
நிர்மாணிக்கப்பட்டது.
ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த பாலம், உள்ளூர் துறைமுகங்களில் இருந்து பொருள்களை கொண்டு வருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது. பாலம் இடிந்த சமயத்தில் அதன் மேல் 30 தொடக்கம் 35 கார்களும், மூன்று கனரக
 வாகனங்களும் இருந்தன.
பெரிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் பாலத்தின் சில பகுதிகள் சரிந்து ரயில் தண்டவாளங்கள், நதி மற்றும் பண்ட சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளன. தரையில் இருந்த யாரும் இதில் உயிரிழக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக