ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மூன்று வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஜெனிவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் ஐ.நா மாநாட்டிற்கு இம்முறை கலந்துக்கொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்ட் ராட் செய்ட் அல் உஷைனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரை நிகழ்த்தவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மீண்டும் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளக விசாரணை குறித்த ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையும் இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இருவிடயங்களும் இலங்கை தொடர்பில் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அறிக்கை இலங்கை பிரதிநிதிகளினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகச் சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த மனித உரிமைகள் ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக