இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni என்ற பகுதியில் 93 மற்றும் 80 வயதான சகோதரிகள் இருவர் ஒரு பாழடைந்த வீட்டில் வசித்து
வந்துள்ளனர்.
இருவரும் கடுமையான வறுமையில் வாடியதால், அருகில் குடியிருந்தவர்களிடம் சில உதவிகளை அடிக்கடி பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ‘மூதாட்டிகள் இருவரையும் சில நாட்களாக காணவில்லை. நீங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவலை பெற்று வந்த பொலிசார், மூதாட்டிகளின் பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது, அங்கு தரையில் மயங்கிய நிலையில் இருவரும் மூச்சு விட சிரமமாகவும், எழுந்து நிற்பதற்கு பலம் இல்லாமலும் கிடந்துள்ளனர்.
உடனே இருவருக்கும் பொலிசார் முதலுதவி அளித்தனர். ஆனால், மூதாட்டிகளால் பேச முடியாததால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மூதாட்டிகளின் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என எண்ணிய பொலிசார் ஏதாவது முகவரி கிடைக்குமா என அங்குள்ள அறையில் தேடியுள்ளனர்.
அப்போது ஒரு கிழிந்த மூட்டையில் யூரோ தாள்கள் அடைத்து வைக்கப்பட்டுருந்ததை பார்த்து அதனை பிரித்து எடுத்துள்ளனர்.
50 யூரோ தாள்களில் சுமார் 1,00,000 யூரோ தாள்கள் இருந்தது கண்டு பொலிசார் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மற்றொரு அறையில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்களும் வைக்கப்பட்டிருந்தது.
இவை அணைத்தையும் மதிப்பிட்டால், 2,00,000 யூரோ (3,21,53,867 இலங்கை ரூபாய்) வரை இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த 93 வயதான மூதாட்டி கடந்த செவ்வாய் அன்று உயிரிழந்துள்ளார்.
ஆனால், 80 வயதான மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவர் ஒரு குழப்பமான நிலையிலேயே இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பணக்கட்டுகளை சோதனை செய்தபோது ஒவ்வொரு தாளும் புதிதாகவும், அழுக்குப்படாமலும் இருப்பதால் அண்மையில் தான் இந்த பணம் இந்த வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என பொலிசார் கணித்துள்ளனர்.
அதேசமயம், இந்த பணம் முழுவதும் மூதாட்டிகளின் சேமிப்பு பணம் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எதனையும் உறுதிப்படுத்தாத பொலிசார் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும், மூதாட்டி அல்லது அவரது உறவினர்கள் வந்து பணத்திற்கான உரிய விளக்கம் அளித்தால் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக