நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 23 செப்டம்பர், 2013

தீவிரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 60ஆக


                       

 கென்யாவின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள்.

அதன்பிறகு இப்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான 'வெஸ்ட் கேட்' என்ற வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த சுமார் 15 தீவிரவாதிகள் புகுந்து கையெறி குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது அந்த வணிக வளாகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பேர் இருந்தனர். வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் போட்டியும் நடந்து கொண்டு இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

இதனால் ஒரே களேபரமாக இருந்தது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சுருண்டு விழுந்து செத்தனர். இந்த கொடூர தாக்குதலின் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 60 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வணிக வளாகத்தில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடந்தன. வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்றும் சண்டை நீடித்தது. அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிர் இழந்து உள்ளனர்.

கனடா தூதரக அதிகாரி ஒருவர், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரின் மனைவி ஆகியோரும் பலியானவர்களின் பட்டியலில் உள்ளனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது. அவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீதர் நடராஜன் (வயது 40).

சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரான இவர் கென்யாவில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இன்னொருவர் பரம்ஷு ஜெயின் (8) என்ற சிறுவன். இந்த சிறுவனின் தந்தை நைரோபியில் உள்ள ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீதர் நடராஜனின் மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா (36), பரம்ஷு ஜெயினின் தாயார் முக்தா ஜெயின், 12 வயது சிறுமி பூர்வி ஜெயின், நடராஜன் ராமச்சந்திரன் ஆகிய 4 இந்தியர்களும் படுகாயம் அடைந்தார்கள்.

நடராஜன் ராமச்சந்திரன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களில் மஞ்சுளா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கென்யாவில் சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதாக நைரோபியில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக கென்யா அதிபர் உகுரு கென்யட்டாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், இதுபோன்ற வன்முறை செயல்களை கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் கென்யா அரசுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதின் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட மேலும் பல நாடுகளும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளன. சோமாலியா நாட்டில் செயல்படும், அல்கொய்தா ஆதரவை பெற்ற அல்-ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று உள்ளது.

இது அல்கொய்தா ஆதரவு பெற்ற இயக்கம் ஆகும். அல் ஷபாப் இயக்க தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அபு மூசா மொம்பாசா என்ற தீவிரவாதி பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள கென்யா அதிபர் உகுரு

கென்யட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தனிப்பட்ட முறையில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரை இழந்து இருப்பதாகவும் அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக