நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஜூன், 2013

வெளிநாட்டு தலைவர்களை பிரிட்டன் ரகசியமாக உளவு பார்த்தது அம்பலம்


ஜி20 மாநாட்டிற்கு வந்த தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக 2009-ம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயன்படுத்துவதற்காக சிறப்பு இன்டர்நெட் மையங்களை பிரிட்டன் உளவுத் துறை அமைத்துள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள், யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க 45 பேர் கொண்ட குழுவை பிரிட்டன் உளவுத் துறை நியமித்துள்ளது.
துருக்கி நிதியமைச்சர் மெஹ்மத் சிம்செக், தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்பட 15 பேரது செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், அவர்கள் தங்கள் நாட்டுடன் பரிமாறிக் கொண்ட மின்னஞசல்கள் மற்றும் மடிக்கணனிகளில் உள்ள தகவல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே ஜி8 நாடுகளின் மாநாடு பிரிட்டனில் நேற்று தொடங்கியுள்ளது.
எனவே உளவு பார்த்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கமளிக்க வேண்டுமென்று மாநாட்டில் பங்கேற்கும் பிற நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக