நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 16 ஜூன், 2013

சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்



என்னங்க இது புதிய கதை? இந்தியாவில், ! அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன் தளம் ஒன்றை போர்ட் பிளேரில் அமைக்க விரும்புகிறார்கள் அவர்கள்.
அதாவது, தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அமைத்துள்ள உளவு விமான தளம் போல ஒன்றை அந்தமான் தீவுகளில் அமைக்கும் முடிவில் உள்ளார்கள் அவர்கள். இது தொடர்பாக மத்திய அரசிடம் ஒரு தடவை பேசப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள், ராணுவ வட்டாரங்களில்.
நேற்று நாம் வெளியிட்ட கிரைம் தொடர்பான கட்டுரையின் ஆங்கில லிங்கில் அதிக எண்ணிக்கையான வாசகர்கள் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர். எமது நன்றிகள்.  இந்தக் கட்டுரை ராணுவம் தொடர்பான கட்டுரை.  இதற்கு வாசகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
இந்தியா தற்போது சீனாவுடன் ஒருவித ராணுவ ரீதியான முறுகல் நிலையில் உள்ளதால், அந்தமானில் உளவு விமான தளம் அமைப்பதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி தரும் என நினைக்கிறது அமெரிக்கா.
பென்டகன் அதிகம் பிரஸ்தாபிக்காமல் வைத்திருந்த இந்த திட்டம், எதிர்பாராத விதமாக ராணுவ வட்டாரங்களில் தெரிய வந்து விட்டது. ஆனால், இந்தியாவில் யாரும் இது பற்றி பேசுவதாக தெரியவில்லை.
சரி. கதை எப்படி வெளியே தெரிய வந்தது? அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டி, பென்டகனுக்கு உத்தரவு ஒன்றை கொடுத்திருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், தென்னாசிய பகுதியில் உளவு விமானத் தளங்களுக்கு சரியான இடங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
பென்டகன், இந்தப் பொறுப்பை அமெரிக்க ராணுவத்துக்கான கள ஆய்வுகளை செய்யும் ரான்ட் கார்ப்பரேஷனிடம் (RAND Corporation) கொடுத்திருந்தது. இவர்கள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து விட்டனர். அந்த அறிக்கை பென்டகனால் அப்ரூவல் கொடுக்கப்பட்டு, அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டியிடம் போயிருக்கிறது.
இந்த அறிக்கை லீக் ஆனதில், விஷயம் ராணுவ வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
ரான்ட் கார்ப்பரேஷன் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள, உளவு விமான தளத்துக்கான ஐடியல் ஸ்பாட் – போர்ட் பிளேர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர்!
பென்டகன், 3 நாடுகளை ‘அமெரிக்கா ராணுவ ரீதியாக ஒரு கண் வைத்திருக்க வேண்டிய நாடுகள்’ என்ற பிரிவில் வைத்திருக்கிறது. ஈரான், வட கொரியா, சீனா ஆகியவையே இந்த 3 நாடுகள். இவற்றில் சீனா மீது ஒரு கண் வைத்திருக்க ஐடியல் இடம், போர்ட் பிளேரில் உளவு விமானத்தளம் அமைப்பது.
இந்தியாவுக்கும் சீனா மீது ராணுவ ரீதியான உரசல் இருப்பதால், இந்தியா தலையாட்டி விடும் என்பது, பென்டகனின் வியூ பாயின்ட் (ஒருவேளை இதற்காகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபகால உரசலை ஏற்படுத்தினார்களோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்! ஆனால், சி.ஐ.ஏ. முன்பு ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே செயற்கையான உரசல் ஒன்றை ஏற்படுத்தி வெற்றி கண்டது என்பதை மறக்காதீர்கள்)
மற்றொரு விஷயமும் இங்கு உள்ளது.
சி.ஐ.ஏ.வுக்கு பாகிஸ்தானில் ஒரு ரகசிய உளவு விமான தளம் இருந்தது. பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன் அந்த தளம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த தளத்தின் ஆபரேஷன் ரகசியமாகவே இருந்தது.
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானில் ஷாம்சி என்ற இடத்திலுள்ள விமானப்படை தளத்தில் இருந்துதான் ஆரம்பத்தில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் புறப்பட்டுச் சென்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. ஷாம்சி என்பது ஒரு சிறிய ஊர். பாலுசிஸ்தானின் குவேட்டா நகரிலிருந்து 350 கி.மீ. தென்மேற்கில் இருக்கிறது.
ஷாம்சியில் அமைந்துள்ள இந்த விமானத்தளம் பரவலாக அறியப்பட்டதல்ல. ஆப்கான் யுத்தத்துக்கு முந்திய காலங்களில் சவுதிப் பணக்காரர்கள் பறவை வேட்டைக்காக பாகிஸ்தான் வரும்போது பயன்படுத்திய விமானத்தளம் இது. அதாவது தனியார் விமானங்கள் வந்துபோகும் ஒதுக்குப்புறமான, சிறிய விமானத்தளம். (அந்த நாட்களில் பண்டாரி விமானத்தளம் என்றே அறியப்பட்டிருந்தது)
எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருக்கையில், சி.ஐ.ஏ.வுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கும் முறுகிக் கொண்டது. அதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், ஐ.எஸ்.ஐ. ஒரு காலை வாவாரிவிடும் திட்டத்தை போட்டது. ஷாம்சியில் அமெரிக்க ரகசிய உளவு விமான தளம் இயங்குவதை பாகிஸ்தான் மீடியாக்களுக்கு ‘லீக்’ செய்தது.
அதற்கு முன்புகூட, ஷாம்சி விமானத் தளம் பற்றிய தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகியிருந்தன. ஆனால், சராசரி பாகிஸ்தானி பிரஜையை அவை சென்றடையவில்லை.
ஜனவரி 2002-ல் அமெரிக்க விமானப்படையின் கே.சி.130 ரக விமானம் ஒன்று ஷாம்சி விமானத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி நொருங்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானபோதுதான் அப்படியொரு தளம் பாகிஸ்தானுக்குள் இருக்கும் விஷயம் முதலில் வெளியாகியது.
2006-ல் ஷாம்சி விமானத்தளத்தை அமெரிக்க விமானப்படை காலி செய்துகொண்டு போய்விட்டது. இப்போது அமெரிக்கப் படைகள் அங்கே இல்லை என்று பாகிஸ்தானும் அறிவித்தது.
ஆனால் அதன்பின்னரும் சி.ஐ.ஏ. அந்தத் தளத்தை ரகசியமாக உபயோகித்துக் கொண்டிருந்தது.
2009-ல் பிரிட்டிஷ் பத்திரிகையான த டைம்ஸ் இந்தத் தளத்தை சி.ஐ.ஏ. உபயோகிக்கின்றது என்ற சந்தேகத்தை எழுப்பியது. வானிலிருந்து எடுக்கப்பட்ட கூகிள் ஏர்த் படம் ஒன்றில் இந்தத் தளத்தில் சி.ஐ.ஏ.யின் பிரிடேட்டர் (விமானியற்ற) விமானம் பார்க் பண்ணப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாக த டைம்ஸ் எழுதியது.
நவம்பர் 2009ல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர், “2009ம் ஆண்டு நடுப்பகுதியிலேயே ஷாம்சி விமானத் தளத்திலிருந்து சி.ஐ.ஏ. வெளியேறிவிட்டது” என்று கூறியிருந்தார்.
அதன் பின்னரும் சி.ஐ.ஏ. அங்கிருந்தது.
2011-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ்.ஐ.யும், சி.ஐ.ஏ.வும் முறுகிக் கொள்ளவே, ஐ.எஸ்.ஐ. சி.ஐ.ஏ. அங்கிருக்கும் விபரத்தை நியூயார்க் டைம்ஸ் போன்ற பாகிஸ்தானை ரீச் செய்யாத மீடியாவுக்கு கொடுக்கவில்லை. பக்கா லோக்கல் பாகிஸ்தான் பத்திரிகைகளில் கதை வருமாறு பார்த்துக் கொண்டது.
பாகிஸ்தான் மீடியாக்கள் போட்டுத்தாக்க, பாகிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்க, வேறு வழியில்லாமல் சி.ஐ.ஏ. தமது உளவு விமானங்களுடன் இடத்தை காலி செய்தது. அதன்பின் பாகிஸ்தானில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானத் தளம் இல்லை.
இவ்வளவுக்கும் பின், இனி அந்தப் பக்கம் போக முடியாது. தற்போது ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ.வுக்கு உள்ள உளவு விமானத்தளம் ரகசியமானதல்ல. அங்கிருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் முழுமையாக வெளியேற போகிறது. அதன்பின் அங்கு தலிபான்களின் கை ஓங்கும். இதனால், ஆப்கானில் ஒரு உளவு விமானத் தளத்தை வைத்து இயக்கினால், தலிபான் தாக்குதல் நிச்சயம்.
இதனால், எந்த சிக்கலும் இல்லாத, இந்தியாவின் அந்தமான் தீவுகள் ஐடியல் என்று நினைக்கிறது பென்டகன்.
ரான்ட் கார்ப்பரேஷனின் அறிக்கை செனட் பாதுகாப்பு குழுவால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அடுத்துவரும் வாரங்கள், அல்லது மாதங்களில், இந்தியாவுக்கு அமெரிக்கா எதையாவது ‘வாரி வழங்குகிறதா’ என்பதை கவனமாக பாருங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக